(kattankudi.info
வில் வெளியான எனது ஆக்கம்)
“அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல் (அலை) என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள். புஹாரி, முஸ்லிம்.”
இஸ்லாமிய சஞ்சிகையில் அயலவர் உறவு என்ற கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு ஹதீஸ் இருப்பது தெரிகிறது. ஒன்பதாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தாலும் இந்த ஹதீஸை இதற்கு முதல் நான் கேள்விப்பட்டதில்லை. மனதுக்குள் இருந்த ஒரு வேதனையை இந்த ஹதீஸ் மேலும் அதிகப்படுத்தியது. என் தந்தை இந்த ஹதீஸை கேள்விப்படாமலிருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் ஏன் எங்கள் பக்கத்து வீட்டாருடன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது எனக்கு இதுவரை புரியவில்லை.
ஒருதாய் பிள்ளைகளாய் அவர்களோடு வாழ்ந்த நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை. என் நண்பன் அப்துல்லாஹ்வின் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் ஒற்றைக் கல்லில் கட்டப்பட்ட ஒரே சுவர்தான் இடைவெளி இருந்தாலும் இரண்டு வீட்டையும் இணைக்கும் பாலமாக பின்புறமாக ஒரு தனிப்பட்ட வாசல் இருந்தது. அவர்கள் வீட்டுக்கு நான் முன் வாசலால் சென்றது குறைவுதான். சில உறவுக்காரர்களின் விட்டுகளில் கூட இல்லாத அன்னியோன்னியத்தை அவர்கள் வீட்டில் நான் அனுபவித்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு விஷேசம் என்றால் அவர்கள் வீடும் கழைகட்டி விடும். அவர்கள் வீட்டில் ஒரு சோகம் என்றால் எங்கள் வீடும் சோர்ந்துவிடும் அந்தளவுக்கு இரு குடும்பக்களுக்குமிடையில் ஒரு உயிரோட்டமான் உறவு இருந்து வந்தது.
அப்துல்லாஹ்வின் தந்தை வெளியூரில் வேலை பார்ப்பதால் என் தந்தைக்கும் அவருக்கும் அவ்வளவு தூரம் அன்னியோன்னியம் இருக்காவிட்டாலும் சந்தித்தால் அளவோடு பேசி கொள்வார்கள் ஆனால் மற்ற குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்குமிடையில் இரத்த பந்தத்தை விடவும் இறுக்கமான உறவு இருந்தே வந்தது. எனக்கு விபரம் அறிந்த நாளிலிருந்து அவர்கள் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் எந்த சச்சரவையும் கண்டிராத நான் கடந்த தேர்தல் இந்த உறவின் உயிருக்கு நிரந்தரமாய் உலை வைக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அரசியல் பற்றி எனக்கு அவ்வளவு அறிவில்லை. தேர்தல்கள் வரும் போது மட்டும் புதினம் பார்க்க எல்லா கூட்டங்களுக்கும் நண்பர்களோடு செல்வது வழக்கம். என்ன பேசுகிறார்கள் என்பது பெரும்பாலும் புரிவதில்லை என்றாலும் அடுத்த கட்சி வேட்பாளருக்கு ஏசுவது மட்டும் புரியும். என் தந்தை எப்போதுமே ஊரின் பிரதான அரசியல்வாதி ஒருவருக்கு ஆதரவானவர் அதற்காக களத்தில் இறங்கி வேலை எல்லாம் செய்பவரல்ல. அந்த அரசியல்வாதியின் அபிமானி அவ்வளவுதான்.
தேர்தல் வந்தால் எப்போதும் அரசியல் பேசிக் கொண்டே இருப்பார். அவர் ஆதரிக்கும் அரசியல்வாதிதான் நம் சமூகத்திற்கு இருக்கும் ஒரே பலம் என்றும் அவர் வெற்றி பெறுவதன் மூலமே நம் சமூகத்திற்கு விடிவு கிடைக்கும் என்றும் அடிக்கடி சொல்வார். வழமையாக வருகின்ற தேர்தல் போலல்லாமல் கடந்த தேர்தல் ஏதோ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும் அதனாலென்னவோ அவர் சற்று ஆழமாக அந்த தேர்தலில் மூழ்கிவிட்டார்.
அப்துல்லாஹ்வின் தந்தை அந்த தேர்தலில் என் தந்தை ஆதரிக்கும் அரசியல் வாதிக்கு எதிரணியில் நிற்கும் அரசியல்வாதியை ஆதரித்தார் அதற்காக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இதை அறிந்து கொண்ட என் தந்தை அவரது அரசியல் பேச்சுக்களில் அவரையும் சாடத்தொடங்கி விட்டார். ஒரு நாள் காலை எங்கள் வீட்டு சுவரில் அப்துல்லாஹ்வின் தந்தை ஆதரிக்கும் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததை கண்ட என் தந்தைக்கு அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. கோபம் உச்சக்கட்டத்தை அடைய அப்துல்லாவின் தந்தைதான் இதனை செய்திருக்க வேண்டுமென்று அவரை அழைத்து சப்தமிட தொடங்கி விட்டார். இருவரும் வாக்குவாதப்பட நிலைமை சற்று எல்லை தாண்டி போய்விட்டது. அப்துல்லாஹ்வின் தந்தையோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று எவ்வளவோ சொல்லியும் என் தந்தை அதை ஏற்றுக் கொள்ளாமல் அதிகமான கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீதியில் உள்ளவர்கள் எல்லாம் கூடிவிட இருவர் பக்கத்திலும் இன்னும் சிலர் சேர்ந்துகொள்ள தனிப்பட்ட சண்டை கட்சி சண்டையாய் விரிவடைந்துவிட்டது. ஆளுக்கு ஆள் வாய்க்கு வந்தவாறெல்லாம் பேசத்தொடங்க எங்கே கைகலப்பில் முடிந்து விடுமோ என்று அஞ்சி குடும்பத்தினரும் அழத் தொடங்கிவிட்டோம்.
யார் பக்கம் நியாயம் என்பதெல்லாம் கடந்து அரசியலில் நனைந்து சண்டை வலுத்துவிட்டது. அரசியல் மேடைகளில் எதிர் வேட்பாளரை நோக்கி வீசப்படும் அதே அழுக்கு வார்த்தைகள் இங்கே இவ்வளவுகாலமும் நெருங்கி வாழ்ந்தவர்கள் மீது வீசப்படும் போது என் மனதை உறுத்தியது. ”சமூகத்துரோகிகள், நயவஞ்சகர்கள், சமூகத்தை விற்று பிழைப்பவர்கள், அயோக்கியர்கள், ……,” இன்னும் என்னென்ன்வோ வார்த்தைகள்.
இந்த சண்டை முடிந்ததோடு எங்கள் இரு வீட்டுக்கும் இடையில் ஏதோ இனம் புரியாத அச்சம் உருவாகியது. என் தந்தைக்கோ கோபம் தணிந்த பாடில்லை. “இனிமேல் அந்த குடும்பத்தில் யாரோடும் எந்த உறவும் யாரும் வைத்து கொள்ள கூடாது…” என்று சொன்னதோடு பின்புறமாக இருந்த வாசலை மறைந்து சுவர் முழுமையானது. எனக்கும் அப்துல்லாஹ்வுக்கும் இடையில் இருந்த நட்பு பாடசாலைக்குள் மட்டும் முடங்கிப் போனது. தந்தையின் கோபமான வார்த்தைகள் என் உள்ளத்தை ஒட்டுமொத்தமாய் உடைத்து விட மனதில் ஆயிரம் கேள்விகள் என்னுள்ளே..!
எதற்காக இவ்வள்வு கோபம்? எதற்காக இவ்வள்வு பாரதூரமான சண்டை? ஒரு முஸ்லிமுடைய மானத்தை காக்க வேண்டியவர்கள் நடுத்தெருவில் ஆளுக்கு ஆள் மானபங்கபடுத்த வேண்டிய அளவுக்கு இவர்களை தூண்டிய அரசியல் பற்றி என் மனது சிந்திக்க தொடங்கியது.
என் தந்தை ஆதரிக்கும் அரசியல்வாதி எங்கள் வீட்டுக்கோ அவர் ஆதரிக்கும் அரசியல் வாதி அவர்கள் வீட்டுக்கோ வந்ததுமில்லை ஏதாவது பிரயோசனம் அவர்களால் நாங்கள் கண்டதுமில்லை. ஆனால் இந்த இரு குடும்பங்களும் இத்தனை காலம் ஒருவருக்கொருவர் எவ்வளவோ விடயங்களில் உதவியிருக்கின்றன ஒத்தாசையாய் வாழ்ந்திருக்கின்றன. மார்க்கத்தையும் மறந்து முஸ்லிம் சகோதர பந்தத்தையும் மறந்து இவ்வளவு தூரம் சண்டையிட்டு கொள்ளும் அளவுக்கு அரசியல்வாதிகள் மீது அபிமானம் வைப்பதால் இவர்கள் அடைந்து கொள்ளும் நன்மை என்ன?
மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களை சண்டையிட்டு கொள்ளும் அளவுக்கு தூண்டுவது ஏன்? அரசிய்ல் வாதியும் அரச ஊழியன் தானே அப்படியிருக்க அந்த பதவிக்கு மட்டும் ஏன் இவ்வளவு போராட்டம், இவ்வளவு சண்டைகள்?
என் தந்தை ஒருநாள் சொன்னார். “எங்கள் தலைவருக்கு எத்தனை பதவிகள், எல்லா வேலைகளையும் செய்வதற்கு அவருக்கு நாளைக்கு 24 மணித்தியாளமும் போதாது, அவ்வளவு தூரம் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுகிறார்..” அரசியல்வாதிகளும் அரசாங்க சம்பளத்தில்தான் வேலை செய்கிறார்கள் என்று கேள்விப்படிருகின்றேன். என் நண்பன் ஒருவனின் சகோதரன் இந்த அரசியல் பிரமுகரின் வெளிநாட்டு கம்பனியில் வேலை செய்வதாகவும் அவருக்கு பல நாடுகளில் கம்பனிகள், சொந்த வீடுகள், தோட்டங்கள் எல்லாம் இருப்பதாகவும் அவன் ஒரு நாள் சொன்னபோது அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்தில் வருடம் முழுக்க மக்கள் சேவையிலேயே தங்களை அர்ப்பணித்து கொண்டிருப்பதாக சொல்லும் இவர்களுக்கு இவ்வளவு சொத்து சேர்ப்பது எப்படி சாத்தியமாயிற்று? என்று நான் வியந்திருக்கின்றேன்.
ஒரு அரச ஊழியன் கனவிலும் நினைக்க முடியாதளவுக்கு ஏதோ ஒரு வகையில் வருமானம் இருப்பதால்தான் இவ்வளவு தூரம் அந்த பதவிக்காக இவர்கள் போராடுகிறர்கள் என்பது புரிந்தாலும் தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழும் என் தந்தை போன்ற பொதுமக்கள் எதற்காக இவ்வள்வு தூரம் தங்களை வருத்திக் கொள்கிறார்கள் என்பது எனக்கு புரியவே இல்லை..
தேர்தல் வந்து விட்டால் ஊரில் அங்கங்கே அச்ம்பாவிதங்கள், இத்தனை பேர் வைத்தியசாலையில் அனுமதி என்ற செய்திகள் வாடிக்கையாகிவிட்டன.
தேர்தல் நடந்து முடிந்து என் தந்தை ஆதரித்தவரே வெற்றியும் பெற்றுவிட எதையோ சாதித்த களிப்பில் என் தந்தை இருந்ததை அவதானிக்க முடிந்தது. வீதி வீதியாக பட்டாசு கொளுத்தி வந்தவர்களிடம் என் தந்தை ஏதோ சொல்ல அவர்கள் அப்துல்லாஹ் வீட்டினுள்ளும் பட்டாசுகளை போட்டு விட்டு செல்ல மீண்டும் ஒரு அமளி துமளி நடந்தேறியது.
வென்று விட்டோம் என்று என் தந்தை இந்த பிரச்சனையை விட்ட பாடில்லை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருந்தார். அவ்வப்போது பிரச்சனைகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருந்தன. இந்த உறவு முறிந்து இவர்கள் இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தை செத்து போய் இரண்டு வருடங்களாகிவிட்டது. அப்துல்லாஹ்வின் தாயாரின் வற்புறுத்தலில் என்னவோ அவர்கள் வீட்டை விற்று விட்டு சற்று தொலைவில் வேறு வீடு வாங்கி போகிறார்கள். இன்றுதான் அவர்களின் கடைசி நாள் அந்த வீட்டில்.
வாரிசாக்கப்பட்டு விடுவார்களோ என்று என்னுமளவுக்கு வற்புறுத்தப்பட்ட அயலவர் உறவை யாரோ இரு அரசியல்வாதிகளுக்காக முறித்து கொண்டு இவ்வளவு தூரம் பகைமையாகிவிட்டார்களே என்று நினைக்கும் போது வேதனை தாங்க முடியவில்லை. நாளை மறுமையில் இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
இதற்குமேல் அந்தகட்டுரையை வாசிக்க மனமில்லாமல் சந்தைக்கு சென்று வரும்போது என் தந்தை வாங்கி வந்திருந்த இன்று வெளியான உள்ளூர் பத்திரிகையை எடுத்து படிக்கிறேன். ” …..அமைச்சருக்கும், ….அமைப்பாளருக்கும் இடையில் நட்புறவு சந்திப்பு” என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்த பகைப்படத்தை பார்த்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
என் தந்தை ஆதரிக்கும் அரசியல்வாதியும் அப்துல்லாஹ்வின் தந்தை ஆதரிக்கும் அரசியல்வாதியும் ஆரத்தழுவிய படி சிரித்து கொண்டிருந்தார்கள்..”
என் மனதில் நிறைந்திருந்த வேதனைகளுக்கு மேல் இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஆயிரமாயிரம் புரியாத புதிர்கள்….?????
(முற்றும்)

No comments:
Post a Comment