Wednesday, 17 July 2013

மஹ்தி அலைஹிஸ்ஸலாம்

Source: Jaffnamuslim.com

(மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்)




1979ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி, பஜ்ரு தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்ட ஓர் அமைதியான நாள். கஃபதுல்லாஹ்வில் சாதாரண வழமையான நாளாகவே தொடங்குகின்றது. ஹறம் ஷரீபை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டு சுப்ஹு தொழுகைக்குத் தயாராகின்றனர். அது இஸ்லாமிய வரலாற்றின் கறை படிந்த கறுப்பு நாட்களுள் ஒன்றாக அமையப் போகின்றது என்பது தொழுகைக்காக அணி திரண்ட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாள், ஹிஜ்ரி 1400 ஆரம்பிக்கின்ற முஹர்ரம் 1ம் நாளாகவும் அமைந்திருந்தது.

Sheikh Mohammed al-Subayil (ஷேக் முஹம்மத் அல் சுபையில்)எனும் இமாம் அவர்களினால் சுப்ஹு தொழுகை நடாத்தப்படுகின்றது. தொழுகை முடிவடைந்ததும், உடனடியாக, சில துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கின்றன. அதுவும், ஹறத்தின் உள்ளேயே கேட்கின்றது. முன்வரிசைப் புறத்திலிருந்து குழப்பமான ஓர் இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது. அப்போது, Juhayman al-Otaybi (ஜுஹிமான் அல் உதைபி) எனும் நபர், இமாமிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தெடுக்கின்றார்.

இன்னும் சிலர் எழுந்து காவலுக்கு நிற்கின்றனர். அப்போது, ஒலிவாங்கியைப் பறித்த ஜுஹிமான் அல் உதைபி, அங்கு தொழுது விட்டு குழுமியிருந்த மக்களை நோக்கி பேச ஆரம்பிக்கின்றார்.  நாட்டிலுள்ள ஊழல் மற்றும் ஏனைய பாவச் செயல்களைப் பற்றி அவர் உரைக்கின்றார். உலக முடிவு நாளுக்குரிய ஏராளமான அடையாளங்கள் கண்முன்னே நிகழ்ந்தேறியும், நிகழ்ந்து முடிந்தும் இருப்பதை அவர் மக்களுக்குப் பறை சாற்றுகின்றார். மேலும், ஒவ்வொரு நூற்றாண்டுக்கொரு முறை, மார்க்கத்தை நல்வழிப்படுத்துவதற்காக ஓர் முஜத்தித்தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதை நினைவு கூருகிறார்.

உலகம் நெறி பிறழ்ந்து, ஈனச்செயல்களிலும், பாவச்செயல்களிலும் மூழ்கியிருக்கும் போது மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீதையும் அவ்விடத்திலே அவர் ஞாபகமூட்டுகின்றார். இப்போது நாம் இருக்கும் கால கட்டம், நபி பெருமானார் கூறிய அந்தக் கால கட்டம் என அவர் நியாயிக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஒரு நபரை அவ்விடத்திற்கு எழுந்து வருமாறு அழைக்கின்றார்.

மக்களுக்கு அவரைக் காட்டி, இதோ, இவர்தான் அந்த மஹ்தி. அனைவரும் இவரிடத்திலே பையத்செய்து கொள்ளுங்கள் என்று வேண்டினார். இவருடைய பெயர் Mohammed Abdullah al-Qahtani (முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி). ரசூலுல்லாஹ் கூறியது போல், இவருடைய பெயர் முஹம்மத். இவரின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ். இவரின் குலம் அல்-கஹ்தான் என்று சொல்லப்படுகின்ற குறைஷிக் குலத்திலிருந்து தோன்றுகின்ற குலம். இதோ இவர் ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாஹீம் ஆகியவற்றிற்கிடையே இருந்து தோன்றுகின்றார். மேலும், ஹிஜ்ரி 1400 முதலாம் நாளிலேயே உங்களிடத்தில் இவர் வந்திருக்கின்றார். ஆகவே, சந்தேகமின்றி இவர்தான் மஹ்தி. நாம் அனைவரும் இவரை ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினார். மக்களோ செய்வதறியாது திகைத்து நின்றனர். பலருக்கு அறபி மொழி தெரியாததன் காரணமாக எதுவுமே விளங்காத சூன்ய நிலையும் அங்கு தோன்றியது.

சிலர் அங்கிருந்த வெளியேற முற்பட்டனர். கதவுகள் அடைக்கப்பட்டு, அங்கு மக்களை வெளியேற விடாமல் ஆயுதம் தரித்த குழு ஒன்று நிற்பதும் அவதானிக்கப் பட்டது. மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கிழமைகள் (அண்ணளவாக 2 வாரங்கள்) புனித கஃபா அந்த ஆயுதம் தரித்த ஜுஹிமான் அல் உதைபியின் குழுவினரால் கைப்பற்றப் பட்டிருந்தது. மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டிருந்தனர். யாரும் உள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப் படவில்லை.

இவர்களால் கஃபா தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்களில் தவாப், அதான், தொழுகை, ஸயீ என எவ்வித அமல்களும் இடம்பெறவில்லை. சவூதி அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் எதுவுமே புரிந்திருக்கவில்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்கு யாரையாவது அனுப்ப முயற்சித்தால் அவர்கள் கஃபாவின் மினாறாக்களில் இருந்த குறிபார்த்துச் சுடும் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்களால் கொல்லப்பட்டனர். கஃபாவில் இரத்தம் சிந்தப்பட்டது. தொழுகை நடாத்திய இமாம் ஷேக் முஹம்மத் அல் சுபையில் அவர்களுக்கு இது கடும் போக்காளர் குழு ஒன்றின் வேலை என்பது புரிந்து விட்டது. பெண் ஒருவரின் ஹிஜாபை அணிந்து அவர் எப்படியோ தப்பித்து விட்டார். அரச தரப்பினருக்கு தகவல் அளித்த முக்கியஸ்தர்களுள் அவரும் ஒருவர்.

அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் பலன் கிட்டவில்லை. மஹ்தியை ஏற்று, அரசாங்கம் தமது பதவிகளை இவர்களுக்குத் தரும் வரை விடமாட்டோம் என கடும் போக்காளர்கள் விடாப் பிடியாக நின்றனர். சுமார் 8 நாட்கள் கடந்த நிலையில் சவூதி அரசு படைகளை அனுப்ப முடிவு செய்தது. உண்மையான மஹ்தி இப்படி நடந்து கொள்ள மாட்டார் என சவூதியின் உலமாக்கள் குழு தீர்மானித்து யுத்தம் செய்வதற்கு பத்வா வழங்கியது. பொதுவாக யுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்ட பிரதேசமாக ஹறம் ஷெரீப் அமைந்திருந்தாலும் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் இது அனுமதிக்கப் பட்டிருந்தது.

மிகவும் திறமையான படைகளை அனுப்பி போராடி மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. படைகள் சென்றன. மூடப்பட்டிருந்த கதவுகளைத் தகர்த்து இராணுவம் உள் நுழைந்தது. அங்கே, ஜுஹிமான் அல் உதைபியின் படையினர்க்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டது. கஃபாவின் உள்ளேயே இது நிகழ்ந்தது. கஃபாவின் அடித்தளத்தில் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்கள் மறைந்திருந்து ராணுவத்தைத் தாக்கினர். அவர்கள் உணவுக்கென பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்திருந்தனர். தண்ணீரை ஸம் ஸம் கிணற்றிலிருந்து பெற்றனர். ஆயுதங்களை பஜ்ரு நேரம் ஜனாஸாக்கள் கொண்டுவரும் சந்தூக்குகளில் கொண்டு வந்திருந்தனர்.

யுத்தம் நிகழ்ந்தது. இரு தரப்பிலும் உயிர்கள் பறிக்கப் பட்டன. மஹ்தி என்று கூறப்பட்ட முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானியும் இதில் கொல்லப்பட்டார். இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருந்த ஜுஹிமான் அல் உதைபி உயிருடன் பிடிபட்டார். அவருடன் சேர்த்து சுமார் 70 பேர் கைது செய்யப் பட்டனர். ஜுஹிமான் அல் உதைபி உட்பட பிடிபட்ட 70 பேரும் 3 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வு மஹ்திஎனும் புனிதரை பலருக்கும் நினைவு படுத்தியது. இஸ்லாத்தில் மிக முக்கியமாகக் கூறப்பட்ட ஒரு புனிதரின் வருகை 80 களில் பெருமளவு மறந்திருந்தாலும் இந்த நிகழ்வின் பின்னர் மெருகடையத் தொடங்கியது. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்தன. பலர் புதிதாக அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

ஜுஹிமான் அல் உதைபி எனும் படையினர் தம்மில் ஒருவராக அறிமுகம் செய்யுமளவு முக்கியமான இந்த மஹ்தி அலைஹிஸ்ஸலாம் யார் ?. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை மறுமை நாளின் அடையாளமா ?. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் ஏன் இஸ்லாத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்?.

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நிஜமான வருகை இஸ்லாத்தின் மறுமை நாளின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மறுமையின் அடையாளங்கள் சிறிய அடையாளங்கள், பெரிய அடையாளங்கள் எனப் பிரிக்கப் படுகின்றன. சிறிய அடையாளங்கள் நிகழ்ந்து முடிவுற்ற பின்னர் மஹ்தி (அலை) வெளிப்படுவார். அதன் பின்னரே பெரிய அடையாளங்கள் நிகழ ஆரம்பிக்கும். எனவே, மஹ்தி (அலை) அவர்களின் வருகை சிறிய, பெரிய அடையாளங்களை இணைக்கும் ஓர் பாலமாக அமையப் போகும் மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.

சிறிய அடையாளங்கள் பெருமளவு எம் கண்முன் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சிறிய அடையாளங்கள் ஓர் குறித்த நிகழ்ச்சியாகவோ அல்லது ஓர் தொடராகவோ அமையலாம்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள், மகளின் தயவில் தாய், பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகுதல், விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகுதல், தகுதியற்றவர்களிடம் பொறுப்பு, பாலை வனம் சோலை வனமாதல், காலம் சுருங்குதல், கொலைகள் பெருகுதல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்து பெருமை பேசுதல், நெருக்கமான கடை வீதிகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், உயிரற்ற பொருட்கள் பேசுதல், பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல், தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல், இறப்பதற்கு ஆசைப்படுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றல், முந்தைய சமுதாயத்தை பின்பற்றல் என்பனவற்றை நடைபெறும் நிகழ்வுகளாகக் குறிப்பிடலாம்.

இது வரை நிகழாத சிறிய அடையாளங்கள் யூதர்களுடன் மாபெரும் யுத்தம், கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, அல்ஜஹ்ஜாஹ் எனும் பெயருடைய மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் கலீபா ஒருவரின் ஆட்சி, செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பைத்துல் முகத்தஸ் வெற்றி, மதீனா தூய்மையடைதல் ஆகியனவாகும்.

சிறிய அடையாளங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையுடன் ஆரம்பித்து விட்டது. அண்ணலாரின் வருகை கூட யுக முடிவின் அடையாளமாகும். கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக சிறிய அடையாளங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இன்னும் சில நடை பெற இருக்கின்றன.
பெரிய அடையாளங்களின் நிகழ்வு இவ்வாறு அல்லாமல் மிக வேகமாக நடந்து முடிந்துவிடும் எனக் கூறப்படுகின்றது. பெரிய பத்து அடையாளங்களாவன,புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா (அலை) இறங்கி வருவது, யஃஜுஜ், மஃஜுஜ், கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம், இறுதியாக எமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்றுதிரட்டல் ஆகும்.
எனவே, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை சிறிய அடையாளங்களின் இறுதி நிகழ்வாகவும் பெரிய நிகழ்வுகளின் ஆரம்பமாகவும் உள்ள ஓர் சங்கிலி இணைப்பாகவே அமையப் போகின்றது. இங்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும், இதனை வரலாற்றுக் கதையாக உள்வாங்கும் அதேவேளை, மறுமையின் நேரம் எம்மை நெருங்குகின்றது என சிந்தித்து எம்மைத் தயார் படுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் அல்குர்ஆனில் மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து,கவனமின்றி உள்ளனர்” (21:1), என எச்சரிக்கின்றான்.
மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்பட்டுவிட்டால் பெரிய அடையாளங்கள் நிகழப் போகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். மஹ்திஎனும் சொல்லின் பொருள் வழிகாட்டப்பட்டவர் அல்லது வழிப்படுத்துபவர்என்பதாகும். இது அவரின் பெயரல்ல. மாறாக, அவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டமாகும். ரசூல் (ஸல்) அவர்கள், நான்கு கலிபாக்களையும் மஹ்திய்யீன்என ஓர் ஹதீதில் கூறியிருக்கின்றார். எனவே மஹ்திஎன்பது வழிகாட்டப்பட்டவர் என்பதைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகும்.
இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான், அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும், அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயராகும், போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் அவர் நிலை நிறுத்துவார்” என கண்மணி நாயகம் (ஸல்) கூறிய ஹதீதுகள் திர்மீதி மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.
எனவே மஹ்தி (அலை) என சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படப் போகும் அவரின் உண்மையான பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். ஒரேயொரு நாள் எஞ்சியிருந்தாலும், அவருக்காக அந்த நாள் நீட்டப்படும் என்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் எமக்கு உணர்த்தப்படுகின்றது. அவரின் வருகை நிகழாமல் உலக அழிவு ஏற்படாது என்பது ஊர்ஜிதமாகின்றது. பெரிய பத்து அடையாளங்களும் அவரின் வருகை நிகழாமல் நிகழாது என்பதும் தெளிவாகின்றது.
போரும், அநீதியும் பெருகி உலகம் தறிகெட்டு நிற்கும் பொழுதில் ஓர் சீர் திருத்தவாதியாக இன் ஷா அல்லாஹ் மஹ்தி (அலை) தோன்றுவார்.

மஹ்தி (அலை), பிறந்தவுடன் அப்துல்லாஹ் எனும் அவருடைய தந்தையார், அவருக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டுவார். இப்பெயர் பிறந்தவுடனேயே அவருக்கு வைக்கப்படும் பெயரே தவிர வளர்கின்ற போது இடப்படும் பெயரல்ல. இந்த விடயம் தெளிவாக்கப் பட வேண்டிய தேவை உள்ளது. காரணம், 30 க்கும் அதிகமான நபர்கள் வரலாற்றில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் தம்மை மஹ்தி என அழைத்துள்ளார்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதல்ல. மாறாக, மஹ்தி என்று தம்மை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் சூட்டிய பெயரே முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். இவ்வாறு தம்மை மஹ்தி என்று அழைத்தவர்களுள் சிலரை இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தமாகும்.

1.       முஹம்மத் இப்னு ஹஸன் இப்னு அலி (9ம் நூற்றாண்டு)
2.       அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் (10ம் நூற்றாண்டு)
3.       இப்னு துமார்த் (12ம் நூற்றாண்டு)
4.       முஹம்மத் ஜௌன்புரி (15ம் நூற்றாண்டு)
5.       அஹ்மத் இப்னு அபீ மஹல்லி (17ம் நூற்றாண்டு)
6.       மிர்ஸா குலாம் அஹமத் (19ம் நூற்றாண்டு)
7.       முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி (20ம் நூற்றாண்டு)

இதில் மிர்ஸா குலாம் அஹமத் என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும் ஈஸா (அலை) அவர்களின் இரண்டாம் வருகைக்குரியவர் என்றும் வாதிட்டவர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் காதியான் என்ற ஊரில் பிறந்த இவர், யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான்தான் என்று கூறியவர். தற்போது அண்ணளவாக 198 நாடுகளில் இயங்கும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்  அல்லது காதியானிகள் இவரின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அஹ்லுல் பைத் எனப்படும் ரஸூல் (ஸல்) அவர்களின் வம்சத்திலிருந்தே தோற்றம் பெறுவார். பனூ ஹாஷிம் கோத்திரத்தின் குறைஷிக் குலத்திலிருந்தே இவரது பரம்பரை அமையும். இவரின் வருகைக்கு முன் அநீதியில் திழைத்து நிற்கும் உலகம், இவரின் வருகைக்குப் பின் நீதியின் உறைவிடமாய் மாறும். இந்த மாற்றம் இமாம் மஹ்தி மூலமாகவே ஏற்படுத்தப் படும். அப்படி ஒரு கண்ணியத்தை அல்லாஹ் அவருக்கு ஏற்படுத்துவான்.

அலி (ரழி) அவர்கள், ஹஸன் (ரழி) அவர்களைக் காண்பித்து, எனது இந்தப் புதல்வன் தலைமைத்துவத்திற்கு உரியவர். இவரின் பரம்பரையிலே ஓர் இமாம் தோன்றுவார். அவரின் பெயர் ரசூல் (ஸல்) அவர்களின் பெயரை ஒத்திருக்கும். குணத்திலும், பழக்க வழக்கத்திலும் (உருவத்தில் அல்ல) அவர் ரசூல் (ஸல்) அவர்களைப் பிரதிபலிப்பார் எனக் கூறினார். மார்க்க அறிஞர்களிடையே இந்த விடயத்திலே பல கருத்துக்கள் காணப்படுகின்றன. இமாம் மஹ்தி (அலை) அவர்கள், ஹஸன் (ரழி) அவர்களின் பரம்பரையில் தோன்றுவார் என்பது அதிகமான மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

'மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்' என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவூது 4272)

மஹ்தி (அலை) அவர்களின் தோற்றம் பற்றி வந்த பலமான ஹதீதாக மேலுள்ள ஹதீதே ஏராளமான மார்க்க அறிஞர்களால் ஏற்றுக்  கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மஹ்தி (அலை) பற்றிய நூற்றுக் கணக்கான ஹதீதுகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு குழுக்கள், மஹ்தி என்ற கதாபாத்திரத்தை தங்களிலிருந்து காட்டி, பிரபல்யம் தேடிக் கொள்வதற்காகவும், சுய லாபத்திற்காகவும், மஹ்தி (அலை) பற்றிய பொய்யான கதைகளையும் ஹதீதுகளையும் தயாரித்துள்ளனர். அது பற்றி நாம் ஒவ்வொருவரும் அவதானமாக இருக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை என்பது அவர் வெளிப்படுதல் என்பதைக் குறிக்கும். மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பு அவரின் வருகை அல்ல. அவர் பிறந்து வளர்கின்ற போது ஓர் மார்க்க அறிஞராகவோ, சீர்திருத்தவாதியாகவோ வளர மாட்டார். சாதாரண ஒரு மனிதராகவே இருப்பார். நெறி பிறழ்ந்து நிற்கும் உலகினை, நீதி நெறி நிலைக்கும் அளவு மாற்றி அமைக்கக் கூடிய ஓர் கண்ணியவானாக அல்லாஹ் அவரை குறித்த நேரம் வரும் போது மாற்றியமைப்பான். அது ஒரு இரவு நேரம் என அறிஞர்களால் கூறப்படுகிறது. மறைவான பல விடயங்களை அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே.

மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்படக்கூடிய கால கட்டம், உலகிலே, மிக மோசமான காலமாக அமைந்திருக்கும். அட்டூழியங்கள் பல்கிப் பெருகிக் காணப்படும். அநீதி பூமியை நிரப்பி வைத்திருக்கும். கொடுங்கோன்மை மிகைத்திருக்கும். அவ்வாறான, ஓர் காலகட்டத்தில், நீதியான நேர்மையான ஆட்சிக்காக மக்கள் ஏங்கித் தவிக்கின்ற வேளையில் அல்லாஹ், அதற்குப் பொருத்தமான ஒருவராக இமாம் மஹ்தி (அலை) அவர்களை மாற்றியமைப்பான். அதன் பின்னரே, அவர் வெளிப்படுவார்.

'இவ்வுலகின் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால், எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் எழச் செய்வான். போர்களால் நிரம்பி இருக்கும் இந்த பூமியில் அவர் நீதியை நிலை நிறுத்துவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: அபூதாவூது 4270)


'மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்' என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவூது 4272)

மேலுள்ள ஹதீதின் பிரகாரம், மஹ்தி (அலை) அவர்கள் வரக்கூடிய சூழல், கொடுமையான ஓர் சூழலாகும். இன்றைய காலகட்டத்தை நாம் எடுத்து நோக்குகின்ற பொழுது எங்கு பார்த்தாலும் அநியாயமும் அக்கிரமமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் சொல்லொணா சோதனைகளை உலகெங்கும் அனுபவிக்கின்றார்கள். துனிசியாவில், சிரியாவில், எகிப்தில், பர்மாவில் ஏன் இலங்கையில் கூட இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சோதனைகள். இப்படி பூமியெங்கும் பித்னாஉள்ள ஓர் காலகட்டத்தில்தான் இமாம் மஹ்தி (அலை) வெளிப்படுவார்.

ஆனால், அவர் வெளிப்படப் போகும் காலம் எந்த மனிதருக்கும் தெரியாது. அப்படி யாராவது கூற முற்பட்டால் அது பொய்யாகத்தான் இருக்கும். அதை யூகிப்பதும் முடியாத காரியம். பித்னா பூமியெங்கும் பரவியிருக்கின்றது, ஆகவே, மஹ்தி (அலை) வெளிப்படுவார் என்று கூட ஆரூடம் கூற முடியாது. அதை அறிந்தவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவன்தான்.

அவர் எங்கு.வெளிப்படுவார் என்ற விடயம் பற்றி ஆய்வுகள் மூலம் மார்க்கவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்னு மாஜாவில் உள்ள பலமான ஹதீத் ஒன்றின் பிரகாரம், முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள், கஃபதுல்லாஹ் பிரதேசத்தில் ஜுர்ஹும் கோத்திரத்தினரால் மறைக்கப்பட்ட புதையல் ஒன்றை எடுப்பதற்கு மூன்று இளவரசர்கள் யுத்தம் செய்து ஈற்றில் ஒருவரும் வெற்றி அடைய மாட்டார்கள். அப்போது, கிழக்கலிருந்து கறுப்புக் கொடிகள் (ஒரு படை) வரும். எந்த தேசமும் கண்டிராத கடுமையான போர் மூளும்.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீத் ஒன்றின் பிரகாரம், கறுப்புக் கொடிகளைக் கண்டால், மஹ்தி (அலை) இருப்பார் (யாருடன் என்று குறிப்பிடப்படவில்லை) என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், தவழ்ந்தேனும் அவரிடம் சென்று பையத் செய்து கொள்ளுங்கள் என்று ரசூல் (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூது கிரந்தத்திலே இடம்பெற்றுள்ள பலமான ஒரு ஹதீதின் பிரகாரம், கலீபா ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து ஓர் உள்நாட்டு யுத்தம் மூளும். அப்போது, எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மதீனாவிலிருந்து தப்பித்து பாதுகாப்புத் தேடி மக்காவிற்கு வருவார். அவர் மக்காவில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மக்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து, கட்டாயப்படுத்தி, கஃபாவில் வைத்து, ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாகீம் ஆகியவற்றிற்கிடையே பையத் செய்வார்கள்.

எனவே, இமாம் மஹ்தி (அலை), மதீனாவிலிருந்து மக்காவிற்கு வருவார்கள். கஃபாவில் இளவரசர்கள் புதையல் ஒன்றிற்காய் யுத்தம் செய்வார்கள். கிழக்கிலிருந்து கறுப்புக் கொடிகளுடன் ஓர் படை வரும். அப்போது மக்கள் இமாம் மஹ்தி (அலை) அவர்களைத் தேடிக் கொண்டுவந்து பலவந்தப்படுத்தி பையத் செய்து, இந்த யுத்தங்களுக்கு ஓர் தீர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.

எனவே, இமாம் மஹ்தி (அலை), தானாக முன்வந்து தன்னை மஹ்தி என்று அழைக்க மாட்டார். பதவியை, தலைமைத்துவத்தை விரும்ப மாட்டார். அவர், யுத்தம் நிறைந்த ஓர் சூழலில், மக்களால், அடையாளப்படுத்தப் படுவார். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஓர் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று திரட்டுவார். அவருடைய ஆட்சி மிகவும் செழிப்பானதாக இருக்கும். எல்லோருக்கும் பணத்தினை அவர் வாரி வழங்குவார். விளைச்சல் பெருகிக் காணப்படும். எல்லோரும் தன்னிறைவோடு வாழ்வார்கள். அவரின் ஆட்சி ஏழு வருடங்களாகும். அந்த ஏழு வருடங்களும் செம்மையான ஆட்சி நிகழும்.

அப்போதுதான் தஜ்ஜாலின் வருகையும் நிகழும். ரசூல் (ஸல்) எதனைக் கொண்டு அதிகம் எச்சரித்தார்களோ, அது நிகழும். இமாம் மஹ்தி (அலை), தஜ்ஜாலை எதிர்த்துப் போரிடுவார்கள். அதற்காக, அவர் டமஸ்கஸில் படையுடன் சென்று ஓர் பஜ்ருத் தொழுகைக்கு தயாரகும் போது ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இரண்டு மலக்கு மார்களின் சிறகில் இறங்குவார்கள். தொழுகைக்காக இமாம் செய்ய தயாராக இருந்த மஹ்தி (அலை), ஈஸா (அலை) அவர்களை இமாம் செய்யுமாறு பணிப்பார்கள். அப்போது, ஈஸா (அலை) அவர்கள் மறுத்து விட்டு மஹ்தி (அலை) அவர்களைத் தொடர்ந்து இமாம் செய்யுமாறு பணித்துவிட்டு பின்னால் நின்று தொழுவார்கள்.

இந்த சம்பவத்திற்கு மேலதிகமாக, மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எந்த ஆதாரபூர்வமான ஹதீதுகளும் அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னர் ஈஸா (அலை) அவர்களால் தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஏனைய நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு இறங்கி ஆட்சி செய்வதற்கு ஏற்ற வகையில் பூமியை சீராக்கி வைப்பது மஹ்தி (அலை) அவர்களின் காலத்திலாகும்.

உலக அழிவின் சிறிய அடையாளங்களையும் பெரிய அடையாளங்களையும் இணைக்கும் சங்கிலியாக அமையப் போகும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும்.

(முற்றும்)

(எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு பல அறிஞர்களின் பயான் மற்றும் ஆவணங்களின் துணையுடன், இயன்றளவு ஸஹீஹான ஹதீதுகளின் பிரகாரம் இது தொகுக்கப்பட்டுள்ளது. அறியாமையினால் ஏதும் தவறுகள் நிகழ்ந்திருப்பின் அல்லாஹ் மன்னித்தருள்வானாக, ஈருலகிலும் வெற்றியாளர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக. ஆமீன்)


No comments:

Post a Comment