Thursday, 18 July 2013

குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள்

திருக்குர்ஆனின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமந்துள்ளன. திருக்குர் ஆன் அறிவித்தபடி அவை அப்படியே நிறைவேறின.

1. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு 
2.யாராலும் கொல்ல முடியாத தலைவர் 
3 மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு 
4. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு 
5 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் 
6. ஜூதி மலை மீது  அமர்ந்த கப்பல் 
7. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு 
8 எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு
9 சாவுக்கடல் சாசனச் சுருள்கள் 306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு 
10. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு 
11 மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு 
12 ரோமப் பேரரசின் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு 
13. அபூலஹபின் அழிவு 
14. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு 
15 சந்திரன் பிளந்தது 
16 வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு 

  • 1. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது 

 "(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்'' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

இவ்வசனம் (73:20) அருளப்படுகிறது. 

பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் கூறுகிறான். இப்படிக் கூறும் போது "உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனிமேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்'' எனக் கூறுகிறான். 
நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. 

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்றால் ஒரு ஆட்சியை அமைத்து படை திரட்டிக் கொண்டு போர் புரிவதைக் குறிக்கும். இப்படி போர் புரியக் கூடியவர்கள் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் உருவானார்கள். இவ்வாறு முன்னறிவிப்புச் செய்திருப்பது, திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய மற்றொறு சான்று.

  • 2. யாராலும் கொல்ல முடியாத தலைவர் 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க்களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். 

ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. தினமும் ஐந்து நேரத் தொழுகை நடத்துவதற்காக மக்களோடு மக்களாக நபிகள் நாயகம் (ஸல்) கலந்து கொள்வார்கள். அன்றைய நிலையில் மிக எளிதாக ஒருவரைக் கொல்வது என்றால் அதில் நபிகள் நாயகம் (ஸல்) முதலிடத்தில் இருந்தார்கள். அப்படியிருந்தும் 

"தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்."(5:67)

 "உம்மை இறைவன் காப்பான்'' என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (திருக்குர்ஆன் 5:67) 

இப்படி அறைகூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை. இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் முஹம்மது நபியவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிரூபணம். என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும். 

அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாகப் பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.



Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/quran_kurum_munarivipu/
Copyright © www.onlinepj.com

No comments:

Post a Comment