(kattankudi.info
வில் வெளியான எனது ஆக்கம்)
கலர் கலரான அலங்காரங்கலோடு கலாசார மண்டபம் களைகட்டி இருக்கிறது. மேடை நிறைந்த ஊர்ப்பிரமுகர்கள் முன்னிலையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். கல்வித்துறையில் சாதனை படைத்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் அரங்கேற இருக்கிறது.
சாதனையாளர்கள் பிறப்பதில்லை மாறாக வாழும் சமூக சுழலும் சுற்றியிருக்கும் வளங்களும் சாதாரணமானவர்களை கூட சில நேரம் சாதனையாளராக்கிவிடுகின்றன. ஆனால் அதே சமூக சூழல் பாதகமாக அமையும் போது சாதனையாளராக வேண்டிய பலரை சாதாரணமானவர்களாக்கியும் விடுகிறது. எது சாதனை என்பது காலத்துக்கு காலம் ஏன் இடத்துக்கு இடமும் வேறுபடுகிறது.
அரிச்சுவடி தெரியாதவர்கள் வாழும் ஊரில் வாசிக்க தெரிந்தவன் கூட சாதனையாளராகின்றான். சாதனை என்ற சொல்லுக்கு சரியான வரைவிலக்கணம் சொல்வது கடினம்தான். அது போல எல்லா சாதனையாளர்களும் ஒரு சமூகத்தால் இனங்காணப்படுவதில்லை என்பதும் நிஜம்தான். சாதனயாளர்களுக்குத் தரப்படும் பரிசை விட இப்படி ஒரு சமூக அங்கீகாரமும் பாராட்டும் எள்ளவு சாதனை படைத்தவனுக்கும் இமயமளவு சாதனை புரிய ஒரு உத்வேகத்தை கொடுக்குமென்பதும் நிஜம்.
சாதனையாளர் வரிசையில் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் விவசாய பீடத்திற்கு தெரிவு செய்யபட்டிருக்கும் அன்வரும் ஒருவன் ஆனால் அவனை சுற்றியிருக்கும் நண்பர்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் அவன் முகத்தில் கழைகட்டவில்லை.
“மச்சான், நீ இரண்டாம் தரம் எழுதுடா, கண்டிப்பா உனக்கு மெடிக்கல் கிடைக்கும் பிறகென்ன அடுத்த வருஷமும் உனக்கு விழாதான். இப்ப மெடிக்கல் செலக்ட் ஆனாலே வீட்டு முன்னால கியூல நிக்கிறாங்க.. ஏதாவது ஒன்ன ஓ.கே பண்ணிட்டா அப்புறம் ராஜயோகம்தான் மச்சி..” பக்கத்திலிருந்தவன் விளையாட்டாய் சொல்வது போல ஊர் கள நிலவர விபரம் சொன்னான்.
அன்வருக்கோ கண் முன்னால் நடக்கும் அத்தனையும் ஒரு சடங்காக தெரிய மனசு முழுக்க தன் வீட்டின் நிலவரத்தை பற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தது. படிக்கும் காலம் முழுக்க பெரும்பாலும் சாப்பாட்டுக்கு மட்டுமே வீடு என்று இருந்தவன் இப்போது வீட்டிலேயெ பெரும்பாலும் இருப்பதால் இது வரை விளங்காத வீட்டு நிலவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. நேற்று இரவு காதில் விழுந்த தாய் தந்தைக்கிடையே நடந்த சம்பாஷனை மனதை வெகுவாக பாதித்திருந்தது.
“என்னங்க ஆமினா கண்டு இண்டைக்கும் வந்துட்டு போறா. ஒரு வருஷத்துல வீட்ட முழுசா முடித்து தார எண்டா மட்டும் அவங்க ஒத்துகிறாங்களாம் எண்டு ஒரே முடிவா சொல்லிட்டாகளாம். இப்படியே எத்தன இடம் வந்து வந்து போகுது காலம் போயிட்டே இருக்கு அவளோட படிச்ச எல்லா பிள்ளைகளுக்கும் கல்யானம் முடிஞ்சிட்டு..”
“என்னை என்ன செய்யச் சொல்றாய்..? மூச்சு பிடிச்சு சீட்டு பிடிச்சு அத்திவாரத்த முடிச்சிருக்கன். இந்த சீட்டு முடியவே இன்னும் ஒரு வருஷம் இருக்கு அதுக்குள்ள இன்னொரு சீட்டு பிடிக்கேலுமா..? ஒரு வருஷத்துல முடிச்சு தாரம் என்டு எத வச்சு அவங்ககிட்ட சொல்ற.. அப்புறம் முடியாம போனா சும்மா விட்ருவாங்களா?”
கனவுகளை சுமந்து மகிழ்ச்சிகளை பரிமாறி பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த பாடசாலை நாட்களில் வீட்டை பற்றி அன்வர் அலட்டிக்கொள்ளவில்லை வீட்டாரும் அவன் படிப்புக்கு இடைஞ்சலாய் எந்த பிரச்சனையையும் சொல்லிக் கொள்வதுமில்லை.
அகராதி இல்லாமல் விரிவுரை தேவை படாமல் ஒரே ஒரு உரையாடலில் வீட்டின் கள நிலவரம் மொத்தமாய் விளங்கியது. தன் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு இருக்கும் சவால்கள் சட்டென்று புரிந்தது. தன் தந்தையின் சோகம் நிறைந்த வார்த்தைகள் மனதை சுட்டது. அவனது இத்தனை நாள் வாழ்க்கையில் எந்த குறையும் அவர் வைத்ததில்லை. அன்றாட காட்சியாய் தன் சொந்ததொழில் எந்த குறையும் இல்லாமல் குடும்பம் நடத்தும் தந்தை கல்யான சந்தையில் கையாலாகமல் நிற்கையில் நான் என்ன செய்து கொண்டிருகின்றேன் என்ற கேள்வி மனதின் எல்லா கோணங்களிலும் எதிரொலித்தது.
மூத்த சகோதரிக்கே இந்த நிலைமை என்றால் பின்னால் நிற்கும் இரண்டு இளைய சகோதரிகள்?? மனது நிறைய ஆயிரம் கேள்விகள் எழ சென்று வருகிறேன் என்று தூக்கம் விடைபெற்று சென்றுவிட்டது.
**********
சாதனையாளர் விழா முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மகிழ்ச்சியாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் கவலை கண்களில் தெளிவாக தெரிந்தது அன்வருக்கு.
இரவு முழுக்க சிந்தித்ததில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கட்டாரில் இருக்கும் நண்பன் அஸ்லமுக்கு ஈமைல் அனுப்ப நெட் கபே சென்றான்.
அன்பின் அஸ்லம்,
உன் ஈமைல் கிடைத்தது. சாதனையாளர் நிகழ்வில் நானும் கௌரவிக்க பட்டதற்காக வாழ்த்து தெரிவித்து இருந்தாய் நன்றிகள். என்னை சுற்றியிருக்கும் எல்லோரயும் போல நீயும் நான் இரண்டாம் தரம் பரீட்சை எழுதினால் மெடிக்கல் கிடைக்கும் என்று சொல்லி அதற்கு எந்த உதவியும் செய்ய தயார் என்று ஒரு படி மேலே போய் எழுதியிருந்தாய் மிக்க மகிழ்ச்சி.
என் கல்வி அடைவுக்கு ஒட்டு மொத்த சமூகமும் வாழ்த்தி ஊரே சேர்ந்து கௌரவித்தாலும் என் கால்களில் உள்ள லாடங்களையும் என் முதுகில் உள்ள சுமைகளையும் யார் அறிவார்?
பல்லாயிரம் கனவுகளோடும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என்ற லட்சியங்களோடும் நான் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தேர்ந்தது நிஜம் ஆனால் அவை எல்லாம் நம் சமூக கட்டமைப்பை பற்றிய சரியான தெளிவின்றி முளைத்தவை.
என் வீட்டு நிலைமை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்க நான் மட்டும் சிகரம் தொட நினைப்பது நியாயமில்லை. பெண்களின் திருமணத்தை தீர்மானிக்கும் முக்கிய அளவுகோலாக வீடு கட்ட வேண்டி இருக்கும் சமூக சூழலில் மூன்று சகோதரிகளோடு பிறந்த என் போன்ற நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு உயர்தரம் வரை கல்வி என்பதே ஒரு வரப்பிரசாதம்தான். என் சகோதரியின் திருமணத்திற்காய் என் பெற்றோர் தட்டுத்தடுமாறுகையில் பட்டப்படிப்பை நான் எப்படி தொடர்வேன்..?
இந்த நிலைக்கு யாரையும் குற்ற சொல்ல நான் விரும்பவில்லை. வாழையடி வாழையாக வழக்கத்தில் இருந்து வந்தாலும் இது திருத்தப்பட வேண்டிய தீர்ப்பல்லவா? நான் பாதிக்கப் பட்டதால் இதை சொல்லவில்லை சாதனை படைக்கும் அத்தனை தகுதி இருந்தும் விதைக்குள்ளேயே முடங்கிப்போனவர்கள் எத்தனை பேர் நம் சமூகத்தில்? தங்கள் கனவுகளை விற்று சகோதரிகளுக்கு கல்யாணம் செய்து வைத்தவர்களும் தங்கள் கால்களையே விற்று கல்யாண பாதை அமைத்து கொடுத்தவர்களும் ஏராளம்.
நான் இரண்டு முடிவுகளோடுதான் இந்த ஈமைலை உனக்கு வரைகிறேன்.
நம் சமூககத்தின் வேரை அறுத்து கொண்டிருக்கும் இந்த சீதனக்கலாச்சாரத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் நானும் ஒருவனாக போகிறேன். மூன்று சகோதரிகளை கரைசேர்த்து நீயும் எப்படி வீடில்லாமல் முடிக்க போகிறாய் என்று கேட்காதே? இப்படி சொல்லி சொல்லியே இந்த சங்கிலி தொடர் நீண்ட நெடிய தூரம் தொடர்ந்துவிட்டது. என் செருப்புக்கள் களவு போனதற்காய் இன்னொருவர் செருப்பை நான் திருடுவதை நியாயபடுத்த முடியாது. இன்னும் இன்னும் முன்னோர்களையே குற்றம் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை நம்மை போல் இளைஞர்கள் முன் வராமல் இந்த அவலத்திற்கு முற்று புள்ளி வைப்பது சாத்தியமில்லை.
தியாகங்களும் சிரமங்களும் இல்லாமல் சமூக மாற்றம் என்பது நடப்பதில்லை. முன்னோர் விட்ட தவறு இன்று உயர்தரத்தோடு கல்விக்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய அவலம் இன்று என் போன்ற பலருக்கு, ஆனால் இதே தவறு தொடர்ந்தால் வருகிற சமுதாயத்திற்கு அடிப்படை கலவி கூட கேள்விக்குறியாகிவிடும்.
நம் சமூக வரலாற்றின் முகத்தில் கரும் புள்ளியாய் இருக்கும் இந்த கலாச்சாரத்திற்கு உரமிட்டவர்கள் என்ற வரிசையில் நம் பெயரும் இடம் பெற்று விடாமல் பார்த்துக் கொள்வோம்.
என் கனவுகளும் லட்சியங்களும் நேற்று இரவு என் கண்களில் வழிந்த கண்ணீரோடு வழிந்தோடி விட்டன. இன்று நடந்த சாதனையாளர் விழா எனக்கு மட்டும் என் கல்விப் பாதைக்கு மூடு விழா.
என் பெற்றோரின் கவலை போக்க என் சகோதரிகளின் கண்ணீர் துடைக்க நானும் அயல் தேசத்து அகதியாய் அரபு நாடு செல்ல முடிவெடுத்து விட்டேன். என் கல்வித்தகைமைக்கு அங்கே பெயர் சொல்லத்தக்க பதவிகள் கிடைக்காது என்பது எனக்கு தெரியும். பாலை வெயிலில் வாட வேண்டிய வேலை என்றாலும் பத்தடி அறையில் பதினாறு பேரில் ஒருவனாக வாழ வேண்டிய நிலை என்றாலும் உடனடியாக உள்ள விசா ஒன்றை அனுப்பி வை.
என் குடும்பத்தின் வாழ்க்கை பயணம் சந்தோஷமாய் தொடர என் பாதையை மாற்றுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. கண்களை விற்று காட்சிகள் வாங்க வேண்டிய நம் சமூக கலசாரம் மாறாத வரை என் போன்ற இளைஞர்களுக்கு இதுதான் நிலை. இந்த கலாசார மாற்றத்தை நம் போன்ற இளைஞ்ர்களால் மட்டுமே மாற்ற முடியும். இந்த முடிவில் என்னோடு நீயும் உடன்படுவாய் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
அன்புடன்,
அன்வர்.
அன்வர்.
*****
(முற்றும்)

No comments:
Post a Comment