Monday, 8 July 2013

யதார்த்தம் (சிறுகதை)


(kattankudi.info வில் வெளியான எனது ஆக்கம்)


1.
தொழிலை முடித்து வீடு வந்த களைப்பில் சற்று நேரம் சாய்வு நாட்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காதர் நானாவின் கண்கள் வீட்டுக்கூரையை மேய்ந்து கொண்டிருக்க அவரது மனது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. கடந்த மாரியில் தன் குடும்பம் பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றாய் கண்முன் தோன்றின. ஒவ்வொறு மாரிக்கும் ஒரிரு கண்களால் அழும் இந்த கூரை கடந்த மாரியில் பல கண்களால் அழுது இவர்களை படாத பாடுபடுத்தி விட்டது. இந்த வருட மாரி வருவதற்கு முதல் எப்பாடு பட்டாவது கூரையை புனர்நிர்மாணம் செய்வதுதான் இந்த ஆண்டு வரவு செல்வு திட்டத்தின் பிரதான பணியாக இருந்தது அவருக்கு.

காதர் நானா அன்றாடம் அயல் கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்யும் ஒரு ஏழை வியாபாரி. வறுமை கோட்டுக்குள் வாழ்ந்தாலும் தன் அயராத உழைப்பினால் யாரிடமும் கையேந்தாமல் மூன்று பெண்பிள்ளைகளையும் மனைவி சுபைதா உம்மாவையும் நன்றாகவே கவனித்து வருகிறார். படிப்பறிவு குறைவானாலும் மார்க்க விடயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கடற்கரைக்கு அருகாமையில் இவர்களுக்கு இருந்த காணி சுனாமியால் பாதிக்க பட்டபோது கூட அதில் வீடு இருந்ததாக சொல்லி மனு செய்தால் புது வீடு பெற்றுக் கொள்ள முடியும் என்று பலர் ஆசை காட்டியும் காதர் நானா அதை விரும்ப வில்லை. ஹராமான எந்த சொத்தும் என் குடும்பத்தில் சேர கூடாது என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார்.
இந்த வருட ஆரம்பம் முதலே வீட்டு கூரைக்காக சிறுக சிறுக சேர்த்து வந்த பணத்தை தன் மூத்த பிள்ளைக்கு எதிர்பாராமல் வந்த சுகயீனத்திற்காக செலவளிக்க வேண்டி ஏற்பட்டதால் கூரையை பழுதுபார்க்கும் திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலை அவரை ஒவ்வொருநாளும் ஆட்கொண்டது. சிந்தனைகளில் முழ்கியிருந்தவரை வாசலில் யாரோ அழைக்கும் குரல் நிதர்சனத்திற்கு கொண்டுவந்தது.

வாசலில் அயல் வீதியில் வசிக்கும் ஓரிரு இளைஞர்கள் நிற்பதை கண்டு அவர்களை நோக்கி சென்றார்.

“நானா, எதிர்வருகின்ற தேர்தலில் நமது சேரை ஆதரித்து வோட்டு கேட்டு வந்திருக்கோம். நாம எல்லோரும் சேர்ந்து சேரை எப்படியாவது வெல்ல வைக்கணும். உங்களுக்கே தெரியும் நமது வீதி மேடும் பள்ளமுமாக இருந்ததால நாம எவ்வளவு கஷ்டபட்டோம். சேர்ர முயற்சியாலதான் இன்டைக்கு கொங்க்றீட் வீதியா மாறியிருக்கு, இதுக்கெல்லாம் நன்றி கடனாக நாம அவருக்கே ஓட்டு போடனும்..”
மூச்சு விடாமல் பேசி முடித்தான் நன்றாக அறிமுகமுள்ள ஒரு இளைஞன். காதர் நானா தலை ஆட்டியவாரே அவர்கள் கொடுத்த பிரசுரங்களை பெற்று கொண்டார். கதவறுகில் நின்று கேட்டு கொண்டிருந்த சுபைதா உம்மா “நாங்க என்றைக்கும் சேர்ர பக்கம் தான் மன, அவருக்குதான் ஓட்டு போடுவோம்” என்று சொன்னது கேட்டு மலர்ந்த முகத்துடன் அடுத்த வீடு நோக்கி சென்றது இளைஞர் அணி.

காதர் நானாக்கு அரசியலில் ஆர்வமில்லை. அவரது குடும்ப சுமை அதற்கெல்லாம் அவருக்கு இடம் கொடுக்கவுமில்லை. ஆனால் சுபைதா உம்மா தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் பேசுவா, அயல் வீடுகளில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் தனது அபிமான அரசியல்வாதிக்கு ஆதரவாக‌ ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்வா.

“என்னங்க, இந்த முறையும் வோட்டு போடாம இருக்காதீங்க நமது வீதிய கொங்க்றீட் ரோட்டா மாற்றிதந்த‌ நன்றிக்காவது சேருக்கு வோட்டு போடுங்க” என்று முணுமுணுத்தவாறே சமயலறை பக்கம் சென்றார் சுபைதா உம்மா.

காதர் நானாக்கு எல்லாமே ஒரு காதுவழி புகுந்து மறுகாது வழி சென்றதே தவிர மனது முழுக்க கூரை பற்றிய சிந்தனையே ஆட்கொண்டிருந்தது. அல்லாஹ்தான் ஒரு வழி காட்ட வேண்டும் என்ற பெருமூச்சோடு இஷா தொழுகைக்கு செல்ல தயாரானார் காதர் நானா. தொழுது முடிந்து வீடு வந்த வருக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

வழமை போல் சாய்வு நாட்காலியில் அமர்ந்து திக்ர் செய்து கொண்டிருந்தவர் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மூத்த மகள் ஆயிஷா. ஆயிஷா படிப்பில் நல்ல திறமைசாலி வகுப்பில் அனேகமாக முதல் பிள்ளையாகவே வருபவள். காதர் நானாக்கு ஆயிஷா என்றால் உயிர். திருமணம் முடித்து நான்கு வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்து கிடைத்த முதல் பிள்ளை. தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை என்று காதர் நானா அடிக்கடி சொல்வார்.

காதர் நானாவின் திக்ரை கலைத்து ஆயிஷா பேச்சை ஆரம்பித்தாள்.

“வாப்பா, டிசம்பர்ல எனக்கு பரீட்சை இருப்பது தெரியும் தானே, போன மாரியில மாதிரி இந்த மாரிக்கும் வீடு ஒழுகிட்டு இருந்தா என்னால எப்படி வாப்பா ஒழுங்கா படிக்க முடியும்? கூரையை திருத்த வைத்திருந்த பணத்தில்தானே எனக்கு வைத்தியம் செய்தீங்க அதனால என்ட இந்த பதக்கத்த விற்று கூரை வேலையை பாருங்க வாப்பா..!”

ஆயிஷாவின் வார்த்தைகள் காதர் நானாவின் மனதில் இருந்த கவலையை மேலும் அதிகரித்தது. தன் பிள்ளைகளுக்கு தங்க நகை போட்டு பார்க்க முடியலயே என்று அடிக்கடி கவலைபடுவார். ஆயிஷா அகில இலங்கை ரீதியாக நடந்த தமிழ் தின விழா போட்டிகளில் கலந்து கொண்டு பெற்று வந்த தங்க பதக்கம் மட்டுமே அவர்கள் வீட்டில் தங்கம் என்று இருந்து வந்தது. தன் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக அவள் அதை பாதுகாத்து வந்தாள். வீட்டில் பண நெருக்கடி வரும் போதெல்லாம் சுபைதா உம்மா எப்படியாவது அதை அடகு வைக்க முயற்சிப்பார் ஆனால் வட்டிக்கு வைக்க நான் ஒருபோதும் தரமாட்டேன் என்று ஆயிஷா அதை கொடுத்ததே இல்லை. காதர் நானாவும் அதற்கு விரும்புவதில்லை. இப்போது அதை விற்று விட சொல்லும் மகளின் வார்த்தைகள் முள்ளாய் மனதில் குத்தினாலும் அதை விட வேறு வழியும் அவருக்கு இருக்க வில்லை. குடும்ப சூழலை உணர்ந்து நடக்கும் பிள்ளையாக ஆயிஷாவை பார்த்து அல்லாஹ்வை புகழ்ந்துகொண்டார்.

***
2.
மகளின் தங்க பதக்கத்தை விற்ற காசோடு ஒருநாளைக்கு இரண்டு சந்தைகளுக்கு சென்று வியாபாரம் செய்து இடைவிடாது உழைத்து ஒருவாறு கூரையின் திருத்த வேலைகளை செய்துமுடித்தார் காதர் நானா. பல மாதங்களாக மனதை அடைத்திருந்த பெரும் சுமையை இறக்கி வைத்த நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது.

முன்பெல்லாம் வானம் கொஞ்சம் இருட்டி விட்டாலே காதர் நானாவின் மனதிலும் கவலை வந்து ஒட்டிவிடும். ஆனால் இன்று வானம் நன்றாகவே இருட்டி ஒரு அடைமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டும் காதர் நானா நிம்மதியாக உறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தார்.
மழை பெய்யும் இரவுகளில் கூரை எங்கெங்கே அழுகிறது என்று மோப்பம் பிடித்து அங்கங்கே பாத்திரம் வைக்கவேண்டிய அவஸ்தை இன்று இல்லை. “மாரி தொடங்க இன்னும் ரெண்டு மூனு மாசம் இருக்கே, இன்டைக்கு என்ன திடீரென இப்படி மழை பெய்கிறது..” என்று மனதிற்குள் எண்ணியவாரே உறங்கிப் போனார்.

சுபஹுக்கு பாங்கு சொல்ல இன்னும் சற்று நேரம் இருக்கையில் ஆயிஷாவின் குரல் கேட்டு திடீரென விழித்தார்.

“வாப்பா, மண்டபத்துக்குள்ள தண்ணி வருது..”

காதர் நானாவுக்கு ஒன்றும் புரியவில்லை. கூரையயை அங்கும் இங்கும் பார்த்தார் அது எங்கும் அழுவதாக தெரியவில்லை. வீதியில் இருந்துதான் வெள்ளம் வீட்டுக்குள் வருகிறது என்று புரிந்து கொண்ட அவர் இன்னும் தாமதிதால் மண்டபத்துக்குள் வந்த தண்ணீர் உள்வீட்டுக்குள்ளும் நுழைந்துவிடுமென்பதால் உடனடியாக தண்ணீரை வடிக்கும் வேலையில் இறங்கினார். மொத்த குடும்பமும் தூக்கம் மறந்து தண்ணீரை தடுக்கும் போராட்டத்தில் இறங்கியது.
மழை சற்று ஓய்ந்த கையோடு சுபஹ் தொழுகைக்காக புறப்பட்டு சென்றார் காதர் நானா. பள்ளியில் இருந்து வரும் வழியில் பக்கத்து வீட்டு கணித ஆசிரியர் பஷீர் சேருடன் பேசிக்கொண்டே வந்தார்.

“சேர், இன்று இரவு கடும் மழை பெய்திருக்கு போல, என்றைக்குமில்லாதவாறு எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டது”

“காதர் நானா, உங்களுக்கு இன்னும் புரியவில்லையா.? அப்படி ஒன்றும் வரலாறு காணாத மழை பெய்யவில்லை. நமது வீதி முதல் பள்ளம் குழியுமாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகளின் மட்டத்துக்கு கீழே இருந்ததால் மழைநீர் நன்றாக வடிந்தோடக்கூடியதாய் இருந்தது ஆனால் இப்போது கொங்க்றீட் வீதி அமைத்தவர்கள் வீடுகளின் மட்டங்களை கவனத்தில் கொள்ளாமலும் சீரற்ற முறையிலும் இந்த வீதியை அமைத்து இருப்பதால் மழைநீர் அனைத்தும் வீடுகளை நோக்கி வழிந்தோடுகிறது. ஒரு இரவு மழைக்கே உங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டது, வருகின்ற மாரியில் உங்கள் நிலைமைய நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது காதர் நானா மக்களுக்கான அபிவிருத்தி என்று சொல்பவர்கள் மக்களின் நலனை கவனத்தில் கொள்வதாக இல்லையே!”

பஷீர் சேர் சொன்ன வார்த்தைகளால் ஆடிப்போனார் காதர் நானா. சூறாவளியில் இருந்து தப்பித்தவனை சுனாமி வந்து தாக்கியதுபோல் ஆகிவிட்டது அவரது நிலைமை. நீர் இறைத்த களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கி போய் இருக்க காதர் நானாவுக்கு தூக்கம் தொலைந்து போய் விட்டது. இன்று தொழிலுக்கு போகும் மனோ நிலையும் அவருக்கு இல்லை. பஷீர் சேரின் வார்த்தைகள் மனதுகுள் திரும்ப திரும்ப ஒலிக்க சாய்வு நாட்காலியில் அமர்ந்தவாறே சிந்தனையில் ஆழ்ந்தார்.
காதர் நானா யாருடனும் எந்த வம்புக்கும் போகாதவர் தான் எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் தன்னால் யாருக்கும் அநீதி நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். தனக்கு நிகழ்ந்திருக்கும் இந்த அநீதிக்கு யாரிடம் நியாயம் கேட்பது என்பது அவருக்கு புரியவில்லை. தேர்தல் வந்தால் மட்டும் வாசல் வரை வரும் அரசியல் வாதிகள் நமக்கு ஒரு கஷ்டம் என்று வரும் போது அவர்களை சென்று சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியா இருக்கின்றார்கள்? இன்றய நிலையில் அவரை சந்திப்பது என்னை போன்ற ஏழைகளுக்கு முடியுமான காரியமா? இவ்வாறு பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தவருக்கு இறுதியாக நகரசபைக்கு சென்று தன் நிலைமையை எடுத்து சொல்வதுதான் ஒரே வழியாக தோன்றியது.
பல மணிநேர காத்திருப்புக்கு பின்னால் முக்கிய பொறுப்பில் உள்ள நகரசபை உறுப்பினர் ஒருவரை சந்திக்க முடிந்தது காதர் நானாக்கு. தன் வீட்டின் பரிதாப நிலையை அழாதகுறையாய் எடுத்து சொன்னார்.

“இங்க பாருங்க நானா, ஊரின் அபிவிருத்தி என்பது நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண காரியமில்ல. நாங்க எவ்வளவோ அர்ப்பணிப்புடன் மக்களின் நன்மை கருதி எமது தலைவரின் வழிகாட்டுதலில் இவற்றை செய்து வருகின்றோம். உங்கள் வீதி எந்த குறையுமில்லாம சரியாக போடப்பட்டு விட்டது என்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரின் உத்தரவாதத்துடன் தான் அதற்காக கொடுப்பணவுகளும் கொடுத்து முடிந்து விட்டது. இப்போது யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக இங்கு வந்து நீங்கள் முறையிடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இனிமேலும் இப்படி வந்து எங்க நேரத்தை வீணாக்காதிங்க, எங்களுக்கு எத்தனையோ கடமைகள் இருக்கிறது…”
காதர் நானாக்கு பதில் பேச முடியவில்லை.
“அழுதாலும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது,
அறுகம் புல் புத்தி சொல்லி அரிவாள் கேட்காது,,!
எங்கோ கேட்ட வரிகள் மனதுக்குள் ஒலிக்க நடை பிணமாய் வீடு வந்து சேர்ந்தார். தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு ரேடியோவையும் போட்டுவிட்டு போனாள் ஆயிஷா.

“விஷேட அறிவித்தல்:
கிழக்கு மாகாணத்தின் கடலை அண்மித்த பகுதிகளில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதால் சில நாட்களுக்கு கனத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…”

வானொலியில் இருந்து ஒலித்த வார்த்தைகள் காதர் நானாவின் காதில் பேரிடியாய் விழுந்தது. மனது மொத்தமாய் நொறுங்கிப் போனவராய் சாய்வு நாட்காலியில் அமர்ந்தவாரே லேசாக கண்ணயர்ந்தவர் காதில் எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்த இன்னுமொரு அறிவிப்பும் விழுந்தது.
” எமது தலைவர், ஏழைகளின் தோழன், மக்கள் நண்பன் …. அவர்களின் அர்ப்பணிப்புடனும் அயராத உழைப்பினாலும் எமதூரில் தொடராக முன்னெடுக்கப் பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் தொடரில்  அமைக்கப்பட்ட 94 வது கொங்கிறீட் வீதி இன்று பிற்பகல் திறந்து வைக்கப் படவுள்ளது ….”

No comments:

Post a Comment